சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் பல இடங்களில் காவலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் மருத்துவர் உயிரிழப்பது இது முதலாவது ஆகும். அவரது சடலத்தை அண்ணா நகர் வேலங்காடு பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது அவரை அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். மேலும் கற்களை வீசி அவர்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை புரிந்த மருத்துவரின் உடலையே மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.