Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.! போக்குவரத்து துறை அறிவுறுத்தல்.!

பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.! போக்குவரத்து துறை அறிவுறுத்தல்.!

Senthil Velan

, ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:59 IST)
மாற்றுத்திறனாளிகள் பயணிக்கின்றபொழுது, பேருந்தில் அவர்களை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்களை அவமதிக்கின்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
இதுதொடர்பாக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: 
 
1. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
 
2. ஸ்டிக்கர்கள் கிழிந்த முறையிலோ, மங்கிய நிலையிலோ இருப்பின், புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
 
3. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் பிற பயணிகள் அமர்ந்து பயணம் செய்யும் பொழுது மாற்றுத்திறனாளிகள் பயணிக்க நேரிட்டால், பணியில் உள்ள நடத்துனர் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கண்ட இருக்கையில் அமர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
4. ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் நடைபெறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணிக்கின்ற பொழுது எவ்வாறு வழி நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
 
5. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை (Unique Disability ID Card) அல்லது மாநில மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அலுவலத்தில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய தேசிய அடையாள அசல் அட்டை (National Identity Disability Card (NIDC)) கொண்டு, 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளார் (Escort) ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White board) மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய இலவச பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்.
 
6. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநில முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரமின்றி, 75% பயண கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கு மாற்றுத்திறனாளி நல அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டை (NIDC) அல்லது Unique Disability ID Card (UDID) அசல் அட்டையை ஆய்வு செய்து நகலை பெற்றுக் கொண்டு (40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட சதவீத முடைய மாற்றுத்திறனாளிகள்) பயணக்கட்டணத்தில் 75% பயணக் கட்டண சலுகையில் உரிய பயணச்சீட்டு வழங்கி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
 
7. மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் அவர்களுக்கு தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 
8. மாற்றுத்திறனாளிகள் பயணிக்கின்றபொழுது, பேருந்தில் அவர்களை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை அவமதிக்கின்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.
 
9. மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது உடல் சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அருகில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 
மேற்படி நெறிமுறைகளை அனைத்து கிளை மேலாளர்கள், பேருந்து நிலைய பொறுப்பாளர்கள், பரிசோதகர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நமது கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் உறுதி செய்ய, தக்க மேல் நடவடிக்கைகள் எடுக்கும்படி அனைத்து மண்டல பொது மேலாளர்களை போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியார் கொலை.! நாடகமாடிய மருமகள் கைது..!!