தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
	
	இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்றும் அதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
	 
	அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாசனத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம் என அவர் கூறியுள்ளார். தற்போது விவசாயத்திற்கு கையாலாகாத திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது என்றும் அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல் முறை வைத்து வழங்கப்படுகிறது என்றும் எடப்பாடி விமர்சித்துள்ளார்.
	 
	பல நேரங்களில் 'லோ வோல்டேஜ்' மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின் மோட்டார்கள் பழுதடைந்து மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
	 
	இதனால் விவசாயிகள் தங்களது கண்முன்னே பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.