Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி! - தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்!

Thondamuthur Farmers

Prasanth Karthick

, ஞாயிறு, 5 மே 2024 (20:02 IST)
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


 
இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான திரு. குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த வளர்ந்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மொத்தம் 5859 ஏக்கரில் சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து விவசாய உறுப்பினர்களும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தென்னை, பாக்கு, வாழை மற்றும் காய்கறிகளை பிரதான பயிர்களை விளைவித்து வருகிறோம்.

தமிழக வனத் துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத் துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. அவ்வாறு யானைகள் அதிகம் இடம்பெயரும் பகுதியாக இருந்தால் எங்களால் இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து இருக்க முடியாது.

எனவே, காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை’ யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொளித்தும் வெயிலில் காத்திருக்குது செம மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?