தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவோருக்கு தண்டனை அளிக்கும் மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்காத மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தடை விதிக்கப்பட்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. உணவுப்பொருட்கள், பால், எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால் இத்திட்டம் வெற்றி திட்டமாக மாறியது. ஆனால் இந்தத் தடை மற்றும் மக்கள் ஆதரவைத் தாண்டியும் சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மீறி பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து இன்று சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. அதையடுத்து தடையை மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு முதல் முறை ₹25000, 2வது முறை ₹50000, 3வது முறை ₹1,00,000 என அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.