தலைமை ஆசிரியர் மாணவிக்கு குட்டு வைத்ததில், மாணவியில் தலையில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது.
இதனால், தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பாடம் தொடர்பான கேள்வி கேட்டுள்ளார். அதில், 6ஆம் வகுப்பு மாணவி நாகலட்சுமி (11) என்பவர் தலமையாசிரியரின் கேள்விக்கு தவறாக பதில் அளித்துள்ளார். இதனால், கோபமடைந்த ஆசிரியர் அவரது தலையில் கொட்டு வைத்துள்ளார்.
இதில் மாணவி நாகலட்சுயின் தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகிலேயே மாணவியின் வீடு உள்ளது. வீட்டுக்கு சென்ற மாணவி, பள்ளியில் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் நான்கு மணி அளவில் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தலையில் கொட்டிய தலைமையாசிரியர் ஜெயராஜ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அலுவலர் பொதுமக்களிடத்தில் உறுதி அளித்ததையடுத்து பெற்றோர் சமாதானம் அடைந்தனர்.