வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடத்துவதால் வாக்குப்பதிவின் போது இயந்திரம் பழுது உள்பட பல்வேறு பிரச்சனைகள் வருவதால் மீண்டும் வாக்குச்சீட்டு மூலமே தேர்தல் நடைபெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் பதிவான நிலையில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில் பரமக்குடியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை விட 50 வாக்குகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகம் காட்டுவதால் தேர்தல் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேல முஸ்லீம் பள்ளி வாக்குச்சாவடியில் பதிவான கூடுதலாக 50 வாக்கு காட்டுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பரமக்குடி சட்டமன்றத்துக்கு 853 வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 903 வாக்குகள் காட்டுகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.