இன்று பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்று குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
கோவில் மட்டுமல்லாம் கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பல கூடுதல் வசதிகளும் செப்பனிடப்பட்டுள்ளன. இன்று குடமுழுக்கை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என அறநிலையத்துறை அறிவித்திருந்தது.
திரளான பக்தர்கள் சூழ தமிழில் திருப்புகழ், கந்தன் அலங்காரம் ஒலிக்க நன்னீராட்டு விழா நடைபெற்றது. அப்போது “கந்தனுக்கு அரோகரா” என பக்தர்கள் திரளாக முழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.