நாளை டெல்லியில் நடைபெற இருக்கும் விழாவில் கலந்து கொண்டு பத்மபூஷன் விருதை வாங்கு வதற்காக கேப்டன் விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லி சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேப்டனுடன் வரும் பொழுது சென்னை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் என்றும் அந்த நினைவு எனக்கு இப்பொழுது வருகிறது என்றும் தெரிவித்தார்.
நாளை மாலை 6:30 மணி அளவில் டெல்லியில் கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கும் விழாவானது நடைபெற இருக்கிறது என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி மாலை கேப்டன் அவர்களுக்கு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற இருக்கிறது, அதிலும் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று திருமதி பிரேமலதா தெரிவித்தார்.
முதலில் கேப்டனின் பெயர் இடம் பெறாததற்கு காரணம் பாஜக கூட்டணியில் இல்லாததுதான் என பலர் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், பத்மபூஷன் விருதை பொறுத்தவரையில் அந்த விழா மேடைக்கு என்றால் போல் பிரித்து பிரித்துதான் வழங்குவார்கள் என்றும் அதன் அடிப்படையில் இப்பொழுது நமக்கு மத்திய அரசு வழங்குகிறது என்றும் விளக்கம் அளித்தார்.
முதன் முதலில் பத்ம பூசன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட போது பத்திரிகையாளர்களிடம் நான் கூறியது, கேப்டன் இருக்கும் பொழுது இது வழங்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கும் விஷயமாக இருந்திருக்கும் என்று பிரேமலதா தெரிவித்தார்.
கேப்டன் மறைவிற்கு நீண்ட இடைவெளிக்கு பின் இந்த விருது வழங்குவது எங்களுக்கு வலியாகத்தான் இருக்கிறது என்றும் இருப்பினும் ஒரு அரசு மிகப்பெரிய விருது வழங்குகிறது அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக வாங்க செல்கிறோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்தியாவில் இருக்கும் அனைத்து உயரிய விருதுகளையும் வாங்கும் தகுதி படைத்தவர் கேப்டன் என்றும் பாரத ரத்னா விருது கேப்டனுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்றும் திருமதி பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.