சீமான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர் என தமிழக கைத்தறித்துறை அமைச்சர் பேசியுள்ளார்.
சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது சரியே என்பது போல் பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து அவர் மீது, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குழைத்தல், மற்றும் வன்முறையை தூண்டுகள் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சீமானின் இந்த சர்ச்சை பேச்சை காங்கிரஸாரும் அதிமுகவினரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுகவை சேர்ந்த துரைமுருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற ஒரு மனிதர், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அவர் பேசியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலை சார்ந்து தமிழகத்தில் போராடும் அமைப்புகள் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் பிரபாகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவரும் நிலையில், அதே தமிழ் தேசிய கொள்கையோடு அரசியலில் களமிறங்கியிருக்கும் சீமான், விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரியே என்பது போல் கூறியது இதர அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.