அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை அறிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.
ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக திசை திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மற்றும் அவரின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தின் 9 நிர்வாகிகளும் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குவதாக நேற்று அறிவித்தனர்.
அதை தொடர்ந்து இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களான நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி வருவது ஓபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
கட்சியின் முக்கிய பிரமுகர்களும் எடப்பாடியார் பக்கமே உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை முடிவுக்கு ஒத்துழைக்கும்படி ஓபிஎஸ்க்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.