மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சராக 2 மாதமாக இருந்த போது எதுவும் பேசாத ஓ.பி.எஸ், சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பின், ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என குண்டை வீசினார். இதுகுறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக, அவரது அணியை சேர்ந்த அதிமுக எம்.பி. மைத்ரேயன், ஓ.பி.எஸ் ஆதரவு 11 எம்.பிக்கள் இன்று டெல்லிக்கு சென்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினர். அப்போது, ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதால் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற மார்ச் 8ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள ஓ.பி.எஸ் தரப்பு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்காக அனுமதியை போலீசாரிடம் பெறும் முயற்சியில் ஓ.பி.எஸ் அணி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.