Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம்

OPS
, திங்கள், 31 அக்டோபர் 2022 (17:00 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில் மக்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வட கிழக்கு பருவமழையின்போது சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதும், பல இடங்களில் உள்ள மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதும், அவர்களுடைய உடைமைகள் பறிபோவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கின்ற நிலையில், அடுத்த பருவமழைக்குள் மழைநீர் தேங்காத வகையில் சரி செய்யப்படும் என்றும், இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு இறுதியில் உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கும் என்றும், இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால்,பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தடுப்புப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும், குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகளும், மின்சார வாரியத்தின் பணிகளும், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில், பல இடங்களில் பள்ளங்களைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை என்றும், அனகாபத்தூர், பம்மல், பொழிச்சலூர், பல்லாவரம் போன்ற இடங்களில் பள்ளங்கள் தற்காலிகமாக மண் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களால் மூடப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வருகின்றன. இவற்றின் காரணமாக மேற்படி பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கும்போது, மேடு, பள்ளம் தெரியாத சூழ்நிலையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மடிப்பாக்கம், சதாசிவம் நகர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கழிவுநீர் கலந்த நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், சென்னை குடிநீர் வாரியப் பணிகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற பணிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பொழுதே இந்த நிலைமை என்றால், பருவமழை துவங்கியபின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே இப்போதே நிலவுகிறது. பருவமழை துவங்குவதற்கு முன்பே வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
 
மழைநீர் வடிகால் பணிகளை இம்மாத துவக்கத்தில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் இப்பணிகள் எல்லாம் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகக்கூடிய நிலையில், பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில் தான் இருக்கின்றன. கால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்ட தலைமைச் செயலாளர் அவர்கள், அவற்றைச் சுற்றி தடுப்புகளை வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட ஆய்வினை விரைவில் மேற்கொள்ள இருப்பதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன. இதன்மூலம் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்பது தெளிவாகிறது. இந்த ஆண்டும் வெள்ளத்தில் மிதப்பதைத் தவிர வேறு வழி இல்லையோ என்ற ஐயம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இந்த அச்சத்திற்கு காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குதான். தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள தற்போதைய நிலையில், கூடுதலாக ஆட்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்யவும், தோண்டப்பட்டுள்ள பள்ளங்களைச் சுற்றி உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து, மக்களை பாதுகாக்குமாறு முதல்-அமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரிழந்த மனைவிக்கு வீட்டில் சிலை நிறுவிய கணவர்..வைரலாகும் புகைப்படம்