தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஜெ. இல்லாத நிலையில் பாஜகவின் பிடியில் அதிமுக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்நிலையில்தான், தமிழகத்தில் தேசிய கட்சிகள் எப்போதும் காலூன்ற முடியாது என தமிழக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ் “ தமிழகத்தில் தேசிய கட்சிகள் எந்த காலத்திலும், எந்த நிலையிலும் காலூன்ற முடியாது. அதுதான் தமிழக மக்களின் தீர்ப்பு” எனக் கூறினார். மேலும், அரசு விவகாரங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உங்களுடன் ஆலோசனை நடத்துகிறாரா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர் , என்னிடம் கலந்தோசித்த பின்புதான் அவர் முடிவுகளை எடுக்கிறார் என பதிலளித்தார். அதேபோல், ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் எனக்கு அழைப்பு விடுத்தால் நிச்சயம் நேரில் ஆஜராவேன் என அவர் தெரிவித்தார்.
தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது என அதிமுக முக்கிய தலைவர்கள் கூறி வருவது தொடர்வது, தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டுள்ள பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.