மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5000க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், இதில் விவசாயிகள், பெண்களும் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மதுரையில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மதுரை மாநகர மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தால் இயற்கை சூழல் பாதிக்கப்படும் என்றும், வனவிலங்குகள் அழியும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை தல்லாகுளம் தபால் நிலையம் வரை நடைபயணமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நடை பயணத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், தடையை மீறி நடைபயணமாக இந்த போராட்டம் நடந்த நிலையில், இந்த நடை பயணத்தில் கலந்து கொண்ட 5000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.