மும்பையில் முடி வெட்ட ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு 5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பையை சேர்ந்த நவ்சீத் என்பவர் வீட்டில் முடி வெட்ட முடிவு செய்து, ஆன்லைன் மூலம் அதற்காக ஆர்டர் செய்தார். இதன் அடிப்படையில், ஒரு சில நிமிடங்களில் சலூன் கடையிலிருந்து ஒரு நபர் வந்தார். அவர் நவநீத் என்பவருக்கு முடி வெட்டிய பின்னர், முகத்தில் சில பருக்கள் இருக்கின்றன; அதை சரி செய்யவா?" என்று கேட்டார். உடனே நவநீத், "சரி செய்யுங்கள்" என்று கூறினார்.
அந்த நபர் முகத்தில் சில கிரீம்களை தடவினார். பிறகு கண்களில் லேசாக கிரீம்களை தடவி, கண்களை சிறிது நேரம் மூடிக்கொள்ளும் படி கேட்டார். இந்த நிலையில், ஒரு சில நிமிடங்கள் கழித்து நவநீத் கண்களை திறந்தபோது, சலூன் கடைக்காரர் காணவில்லை. அதுமட்டும் அல்லாமல், அறையில் இருந்த பீரோவில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் காணவில்லை.
இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.