வெங்காய விலை உயர்வால் பிரியாணியின் விலையும் ரோட்டு கடைகளில் இருந்து ஸ்டார் ஹோட்டல் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையினால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாடெங்கிலும் வெங்காய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கூடவே வெங்காய விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.
சில மாநில அரசுகள் அங்காடிகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் வெங்காய விலை உயர்வு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெங்காய விலை உயர்வு காரணமாக பிரியாணியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ரோட்டு கடைகளில் சிக்கன் பிரியாணி ரூ.120 - ரூ.130-க்கும், மட்டன் பிரியாணி ரூ.150 - ரூ.180-க்கும், நடுத்தர உணவகங்களில் சிக்கன் பிரியாணி ரூ.200-க்கும், மட்டன் பிரியாணி ரூ.250-க்கும், நட்சத்திர விடுதிகளில் சிக்கன் பிரியாணி ரூ.300-க்கும், மட்டன் பிரியாணி ரூ.350-க்கும் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு, முந்தைய விலை உயர்வை விட ரூ.50 - ரூ.100 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு பிரியாணி விரும்பிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.