தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் உள்பட சுற்றுலாப்பயணிகள் சிக்கி ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகியிருப்பதால் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளாது.
குரங்கணி காட்டுத்தீயில் படுகாயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் திவ்யா. இவரது கணவர் விபின் ஏற்கனவே இதே விபத்தில் மரணம் அடைந்த நிலையில் திவ்யா நேற்று மரணம் அடைந்தார். இவருக்கு 99 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஒருசிலர் 70 சதவிகித்ததிற்கு மேல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் மீனா ஜார்ஜ், மதுரை கென்னட் மருத்துவமனையில் சாய் வசுமதி, சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் பார்கவி, மதுரை அரசு மருத்துவமனையில் கண்ணன், சிவசங்கரி, அனுவித்யா, எடப்பாடி தேவி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.