இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான திருமலா நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நவீன் போலேனி என்பவர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் மீது ரூ.45 கோடி கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கையாடல் செய்த பணத்தை தவணை முறையில் திருப்பித் தருவதாக திருமலா நிறுவனத்திடம் நவீன் கூறியதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி ரூபாயை அவர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததை பார்க்கும்போது தற்கொலைக்கு வாய்ப்பில்லை என்றும், எனவே அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கையாடல் செய்த விவகாரத்தில் அவர் மிரட்டப்பட்டு இருக்கலாம் என்றும், அதன் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.