மோடியுடன் நாங்கள் அரசியல் பேசவில்லை, ஆனால் அதிமுகவிற்கு ஆதரவாக பாஜகவினர் பரப்புரைக்கு வருவார்கள் என ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக, பாமக, சரத்குமார் கட்சி போன்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான பாஜகவிடம் ஆதரவு கேட்பார்களா? அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுக - பாஜக சர்சைகள் குறித்து பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் பாஜகவிடம் ஆதரவு கேட்டுவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் தெரிவித்ததாவது,
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவே இல்லை. பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவிடம் பேசியுள்ளோம். பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், பாஜக முக்கிய மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன், சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல எப்போது கேட்டாலும் பதிலில் மாற்றம் இல்லாமல், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என இப்போதும் பதில் அளித்துள்ளார்.
ஓபிஎஸ் இரு கட்சிகளுக்கு இடையே பாலாமகா இருப்பதாகவும் நிச்சயம் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக முடித்து விடுவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் பெருமிதம் கொள்கின்றன என தகவல் தெரிவிக்கின்றன.