அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டணி குறித்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம் என்றும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தில் இன்று அவர் பேசிய போது, 'அதிமுக-பாஜக கூட்டணி தற்போது நடந்துள்ளது. ஆன்மீகத்துக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்றுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். கூட்டணி குறித்து கட்சி தலைமை மட்டுமே முடிவு செய்யும். எனவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எதையும் வெளியில் சொல்ல வேண்டாம்,' என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், 'சமூக வலைதளங்களிலும் கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த பதிவையும் செய்ய வேண்டாம். தொலைக்காட்சி விவாதங்களிலும் கூட்டணி குறித்து பேச வேண்டாம்,' என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
ஏற்கனவே நேற்று, கூட்டணி குறித்து அதிமுக நிர்வாகிகள் பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இன்று அதே கருத்தை நயினார் நாகேந்திரன் அவர்களும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.