Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு - வஞ்சிக்கப்படும் வடசென்னை!

Advertiesment
மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு - வஞ்சிக்கப்படும் வடசென்னை!
, புதன், 6 டிசம்பர் 2023 (15:19 IST)
மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து போதுமான களப்பணியாளர்களை தருவித்து போர்க்கால அடிப்படையில் மீட்பு - நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்.


இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ஏராளமான குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது. மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் அரசு நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டாலும், வடசென்னை பகுதியை அரசு நிர்வாகம் வஞ்சித்து வருவதாகவே தெரிகின்றது.

உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் மூன்று நாட்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். கழிவுநீருடன் மழை வெள்ளம் கலந்துள்ளதால் மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளனர். எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்பகுதிகளில் ஈடுபட்டாலும் கூட அரசு எந்திரம் களமிறங்கினால் மட்டுமே நிலைமையை முழுமையாக சரிசெய்ய இயலும். 

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்யக்கோரி வடசென்னை மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தாலும், அப்பகுதியில் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் தரப்பு மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.  

சென்னையின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும்,  வடசென்னை பகுதிகளில் அரசு நிர்வாகம் முற்றிலும் மந்தமாகவே செயல்பட்டு வருகின்றது.  அரசு எந்திரம் முழுவதும் மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதால் வடசென்னை பகுதி புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ஆகவே, வடசென்னை பகுதியை புறக்கணிக்காமல், முழுவீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதோடு, வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், மணப்பாக்கம், முடிச்சூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல், தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இன்னும் கூட நிவாரணப் பணிகள் சென்றடையவில்லை. உணவு கோரியும், தங்களை வெளியேற்றக் கோரியும் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன. ஆகவே, மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து போதுமான களப்பணியாளர்களை தருவித்து போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஸ் கல்யாண் நன்கொடை!