ஒரு காலத்தில் எஞ்சினியர் சீட் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மெடிக்கல் சீட்டுக்கு நிகரான டிமாண்ட் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஞ்சினியரிங் சீட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கூவிக்கூவி விற்பனை செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால்பல கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான என்சினியரிங் கவுன்சிலிங் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் சேர்க்கை நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட எஞ்சினியரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றீசல் போல் தனியார் எஞ்சினியரிங் கல்லூரி வளர்ந்துவிட்டதும், போதுமான வசதிகள் இல்லாதது மட்டுமின்றி எஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் மிகவும் குறைந்துவிட்டதால் எஞ்சினியரிங் மீதான மோகம் மாணவர்களுக்கு இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகியுள்ளது.