பிரதமர் மோடி சமீபமாக தொடர்ந்து தமிழக பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அதை விமர்சித்து பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென் மாநிலங்களில் பிரதமர் மோடி அடிக்கடி பயணம் செய்து வருகிறார். நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தல் மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களுக்காக தமிழ்நாடு, கேரளாவிற்கு அதிகம் வருகை தருகிறார். தேர்தல் நெருங்குவதால் பிரதமரின் வருகையும் அதிகரித்து வருவதாகவும், மற்ற சமயங்களில் அவர் தென் மாநிலங்களை கண்டுகொள்ளவில்லை என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவில் நடந்த தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது “வட்டி வசூலிப்பவர் கூட தாமதமாகதான் வருவார். ஆனால் பிரதமர் மோடி நான்கு நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு வருகிறார். என்னதான் தரையில் புரண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும். எனவே தமிழ்நாட்டில் ஒரு மண் கூட ஒட்டாது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் மழையால் பாதித்து தத்தளித்துக் கொண்டிருந்தபோது பிரதமர் ஐந்து ரூபாயாவது நிவாரணமாக கொடுத்திருந்தால் வரவேற்றிருப்பேன். ஆனால் அப்போது வராமல் இப்போது நெல்லையில் வந்து உரையாற்றுகிறார். அவர் எதற்காக வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும்” என பேசியுள்ளார்.