மூன்று நாட்கள் சாப்பிடாமல் பட்டினியில் இருந்த வடமாநில தொழிலாளர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வேலை தேடி சென்னைக்கு வந்த நிலையில், சரியான வேலை கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். இதனை அடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த அவர்கள், போதிய உணவு இல்லாத காரணத்தால் மயக்கமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக அவர்களை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், அது அவர்களின் உடல் நிலையை மோசமாக்கியதாகவும், மேலும் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்ததும் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.