Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'நீங்கள் நலமா’ திட்டம் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்ட திட்டம்..! டிடிவி தினகரன் விமர்சனம்.!!

dinakaran

Senthil Velan

, புதன், 6 மார்ச் 2024 (17:16 IST)
தமிழக மக்களின் குறைகளையும், மனக்குமுறல்களையும் எந்த வகையிலும் நிவர்த்தி செய்ய முடியாத தி.மு.க அரசால் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் ‘நீங்கள் நலமா’ திட்டம் வேடிக்கையானது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் தொடங்கப்படும் திட்டங்களைப் போல ‘நீங்கள் நலமா’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
 
கடந்த பழனிச்சாமி ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் முறைகேடுகளால் வெறுப்படைந்த பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், இதய தெய்வம் அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை எல்லாம் முடக்கியதோடு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் தி.மு.க.விற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்திருக்கிறது தி.மு.க அரசின் இந்த திட்டம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
 
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க அரசால் நம்பிக்கைத் துரோகத்திற்குள்ளான மாணவர்கள். டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்திற்கென தலைவரை கூட நியமிக்காத முடியாத நிர்வாக திறனற்ற அரசால் அரசுப் பணி கனவை துறக்கும் அபாயத்தில் இளைஞர்கள்.

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என அறிவித்துவிட்டு 50 சதவிகிதம் பேருக்கு கூட வழங்காமல் ஏமாற்றிய தி.மு.க அரசால் ஏமாற்றப்பட்ட குடும்பத்தலைவிகள்.  இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளையும் குறைத்து மரியாதைக் குறைவாக நடத்தும் விடியா அரசால் அவமதிக்கப்படும் பெண்கள்.

முதியோர் உதவித் தொகையை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்துவோம் என அறிவித்துவிட்டு ரூ.200 ரூபாய் மட்டுமே உயர்த்திய தி.மு.க அரசால் புறக்கணிக்கப்பட்ட முதியோர்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்றில் அணையை கட்ட துடிக்கும் அண்டை மாநிலங்களுக்கு கண்டனம் தெரிவிக்க முடியாத தி.மு.க அரசால் வஞ்சிக்கப்பட்டு வரும் விவசாயிகள்.
 
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் தொடங்கி மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் போராடும் சூழல். அரசு நிர்வாகத்தின் அடிமட்டத்தில் தொடங்கி உயர்மட்டம் வரையிலான ஊழல் குற்றச்சாட்டுகள், தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தால் நிம்மதியை இழந்த பொதுமக்கள். 

இப்படியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி முதியோர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் நலமாக இல்லாத நிலையில் யாரிடம் நலம் விசாரிக்க நீங்கள் நலமா திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு? என பொதுமக்களே கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்பது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது, வறுமையை வென்று சமதர்மம் காண்பதை லட்சியமாக கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான ஆட்சி முதன்முறையாக அமைந்த தினம் இன்று.


பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த கட்சியை தங்களுடைய குடும்ப சொத்தாக்கி, அவரின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து, மக்கள் விரோதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் விடியா தி.மு.க அரசால் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் மற்றொரு திட்டமே ‘நீங்கள் நலமா’ திட்டம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் ஆதாரை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்: சென்னை பெண்ணிடம் நூதன மோசடி முயற்சி..!