தமிழகத்தில் மே 5 ஆம் தேதி நீட் தேர்வுகள் நடக்க இருப்பதால் ஹால் டிக்கெட்களில் பிரச்சனை ஏதும் இருந்தால் அதைத் திருத்திக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் தமிழக அரசு நீட் தேர்வை தடுக்க தவறியது. இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறத்யு. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அணிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அது மிகப்பெரிய விவாதப் பொருளானது. அதையடுத்து இந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இதனை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஹால் டிக்கெட்டுகளில் ஏதேனும் தகவல் பிழை மற்றும் எழுத்துப்பிழை இருந்தால் அதை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சரி செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.