ஸ்டெர்லைட் ஆலையை 3 வார காலத்திற்குள் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க தனியாக குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என மார்தட்டிய தமிழக அரசு இந்த நடவடிக்கைக்கு என்ன பதிலளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.