மதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அக்கட்சியிலிர்ந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அப்போது ஜெ., சம்பத்துக்கு இன்னோவா கார் ஒன்றை பரிசளித்தார். இந்த சம்பவம் இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சம்பத். சசிகலா யாரென்றே எனக்கு தெரியாது என்றும் பேட்டி கொடுத்தார். ஆனால் பேட்டி கொடுத்த இரு தினங்களில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டுள்ள ஓபிஎஸ் அணிக்கு பாத்திமா பாபு, மற்றும் நடிகை லதா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் நாஞ்சில் சம்பத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் திட்டம் கழக ஆட்சியை கவிழ்ப்பது அல்லது மு.க.ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது அதுவும் முடியாவிட்டால் தேர்தலுக்கு வழிகாணுவது, இந்த சதி திட்டத்திற்கு சப்பைக்கட்டு கட்ட இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார் தப்பாட்டம் ஆடுகிறார். பாத்திமா பாபு , லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால் பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து அரசு வீட்டில் இருந்துகொண்டு அரசியலில் காணாமல் போன ஆட்களையும் காலாவதியான தலைவர்களையும் சில தேவையற்ற கூடுதல் சுமைகளையும் அரசு வீட்டில் கூட்டி வைத்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார் ,பன்னீர் செல்வத்துக்கு மானமும் மரியாதையும் இருக்குமானால் அரசு வீட்டை காலி செய்து விட்டு அரசைப் பற்றி பேச வேண்டும் அரசு வீட்டில் இருந்துக் கொண்டே ஆபத்தான விளையாட்டை விளையாடுவது ஆரோக்கியமானது அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
நாஞ்சில் சம்பத்தின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.