தமிழகத்தில் அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் அதிகளவில் மழைப் பெய்து வறட்சியைக் குறைக்கும் என் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் அறிவித்துள்ளார்.
மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர். இவருக்கு சமூக வலைதளங்களில் பின் தொடர்பாளர்கள் அதிகளவில் இருந்து வருகின்றனர்.
வானிலை சம்மந்தமாக பல கூட்டங்களில் பங்கேற்று பொது மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். வானிலை சம்மந்தமாக நேற்றுப் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ‘வானிலை- ஒரு அறிவியல் பார்வை’ எனும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தன்னார்வல வானிலை அய்வாளர் என் செல்வக்குமார் பின் வருமாறு பேசினார்:-
’அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து வளிமண்டல வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதால், படிப்படியாக மழை அளவும் உயரும். மார்ச் இறுதியிலிருந்து மே இறுதி வரை மிக கனமழை பெய்யலாம். எனவே, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மழை அதிக அளவில் பெய்து மழைக்காலமாக இருக்கும். இதனால் அடுத்த ஆண்டு வறட்சிக் குறையும்’ என கூறினார்.