கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான முறையில் காயங்கள் ஏற்பட்டு வருவதை அடுத்து, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி அதன் பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் கடலில் முள் எலிகள் கரை ஒதுங்கி வருவதாகவும், கடலில் குளிக்கும் பக்தர்களின் மீது அவை தாக்குகின்றன என்றும் கூறப்படுகிறது.
முள் எலிகள் மீது இருக்கும் சிறிய கூர்மையான முட்கள் கடலில் புனித நீராடும் பக்தர்களுக்கு காயங்களை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கடலில் குளிக்கும் பக்தர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கரையில் ஒதுங்கும் முள் எலிகளை நீக்குவது குறித்து கோவில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடலில் ஒதுங்கும் முள் எலிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கரை ஒதுங்கும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பாக அகற்றி, பக்தர்கள் பாதுகாப்பாக நீராட வசதியான சூழல் ஏற்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.