திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்றைய தலையங்கத்தில் அதிமுக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர்களை கடும் விமர்சனங்கள் செய்துள்ளது. மேலும் திமுகவின் 37 எம்பிக்கள் என்ன செய்கிறார்கள் என்று அதிமுகவினர் கேட்டதற்கும் அந்த தலையங்கத்தில் பதில்அளிக்கப்பட்டுள்ளது
திமுக எம்பிக்கள் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து தமிழகத்திற்காக குரல் கொடுத்து கொண்டே இருக்கின்றனர். முந்திரிக்கொட்டை மந்திரி ஜெயக்குமார் இருமொழிக் கொள்கையை பற்றிப் பேசுகிறார். அது குறித்து நமக்கு தெரியாதா? தமிழ் ஏன் அஞ்சல்துறை தேர்வில் புறக்கணிக்கப்பட்டது என்றால் நம்மை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கச் சொல்கிறார் அந்த முந்திரிக்கொட்டை மந்திரி. பிரச்சினைகளை குழப்பம் செய்யவே அதிமுகவினர் இவரை வைத்து இருக்கின்றார்கள் என்று கூறப்பட்டுள்ளது
மேலும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் கோவாவில் டூயட் பாடி நிறுவனங்களை கொண்ட கட்சி இப்படி எதற்கு பதில் சொல்லும்? இந்தி எதிர்ப்பு உணர்வு திமுகவை விட நூறு மடங்கு இருக்கும் என்று கூறும் முதல்வர் எடப்பாடி நாங்கள் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்று தெளிவாக சொல்ல முடியுமா? திமுகவை போல் போர்க்குரல் எழுப்ப முடியுமா? என்ற கேள்வியை முரசொலி எழுப்பியுள்ளது
மேலும் சட்ட அமைச்சர் சட்டசபையில் பேசும்போது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி அதில் குளிர் காயலாம் என்று பார்க்கிறார்கள் என்று கூறுகிறார். சட்ட அமைச்சருக்கு குளிராது. ஆனால் மற்றவர்களுக்கு வாடையால் குளிருமே. என்ன செய்வது? ஒன்று தெளிவாகத் தெரிகின்றது. ஏற்கனவே அதிமுக ஆட்சியாளர்கள் தெண்டனிட்டவர்கள். இப்போது மத்தியில் மண்டியிடத்தான் செய்வார்கள். அதிகாரத்தை அனுபவிக்கும் அடிமைகளுக்கு யாராவது ஒரு எஜமானன் இருந்தாக வேண்டும். ஒரு இடத்தில் சுதந்திரமடைந்து அதை இன்னொரு இடத்துக்கு பெற்றுவிடுவார்கள். விடுதலையை விற்று விட்டவர்கள் எப்படி போர்க் குரல் எழுப்புவார்கள்? என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது
மேலும் பதவிக்காக வினாக்குறி போல் ஜெயலலிதா சசிகலாவிடம் வளைந்து கிடந்தவர்கள், எட்டு அங்கங்கள் மண்ணில் பட்டவர்கள் இன்று மோடி சர்க்காரிடம் மண்டியிடுகிறார்கள் என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது