முகிலனை சந்திக்க சென்னை வந்து கொண்டிருந்த மனைவிக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (09:53 IST)
சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனதால் அவரை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் முகிலனை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில போலிசார் அவரை கண்டுபிடித்தனர்.
சிபிசிஐடி போலீசாரிடம் முகிலன் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது, இந்த நிலையில் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி அறிந்த அவரது மனைவி பூங்கொடி அவரை சந்திப்பதற்காக நேற்றிரவு சென்னை கிளம்பினார். அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார் கள்ளக்குறிச்சி அருகே வந்த போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் சிக்கிய பூங்கொடிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் சென்னைக்கு கிளம்புவார் என தெரிகிறது
அடுத்த கட்டுரையில்