எம்.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்.பி இல்லை என எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிய நிலையில் மாநிலங்களவை சபாநாயகருக்கு ரவீந்திரநாத்தும் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார். இந்த நீக்கப்பட்ட உறுப்பினர்களில் ஓபிஎஸ் மகனும், ராஜ்யசபா எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் ஒருவர்.
இந்நிலையில் தற்போது மாநிலங்களவைக்கு கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து மாநிலங்களவை எம்.பியாக உள்ள ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ளார். எனவே இனி அவர் மாநிலங்களவையில் அதிமுக எம்.பியாக கருதப்படக்கூடாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து ஓ.பி,ரவீந்திரநாத் சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.