திருச்சியில் மருத்துவமனைக்கு வர மறுத்த மகளை பெற்ற தாயே கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேர்ந்தவர் அன்னக்கிளி. இவரது மகள் மஞ்சுளா. 35 வயதாகும் மஞ்சுளாவுக்கு அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் என்பவருடன் திருமணமாகி 8 வயதில் ஹேமேஷ் என்ற பையனும் உள்ளான். மஞ்சுளா அப்பகுதியில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சிலகாலம் முன்னதாக மஞ்சுளா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதால் ஊர் காவல்படை பணியை விட்டுள்ளார். பின்னர் அவரை தாளக்குடிக்கு அழைத்து சென்ற அவரது தாய் அன்னக்கிளி, அவரை சிகிச்சைக்கு அடிக்கடி மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார்.
சமீபத்தில் மஞ்சுளா தாளக்குடியில் இருந்து அரியனாம்பேட்டைக்கு அன்னக்கிளியிடம் சொல்லாமலே சென்றுள்ளார். இதனால் அரியனாம்பேட்டைக்கு சென்ற அன்னக்கிளி மருத்துவ சிகிச்சைக்காக தன்னுடன் வரும்படி மஞ்சுளாவை அழைத்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது அன்னக்கிளி பெரிய கல்லை எடுத்து மஞ்சுளா தலையில் போட்டு கொன்றுள்ளார்.
பின்னர் அவரே சென்று தொட்டியம் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னக்கிளியை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.