ஊழல் செய்தவர்களை பாஜகவில் சேர்த்து விட்டு, ஊழலை பற்றி பிரதமர் மோடி பேசலாமா என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமலியான இந்தியாவாக மாறும் என்றும் தெரிவித்தார்.
இத்தனை நாட்களாக வெளிநாட்டில் டூர் அடித்த பிரதமர், தேர்தலால் தற்போது உள்நாட்டில் டூர் அடிக்கிறார் என்று அவர் விமர்சித்தார். சென்னையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோ 'பிளாப் ஷோ' என விமர்சித்த முதல்வர், ஊழல் செய்தவர்களை பாஜகவில் சேர்த்து விட்டு, ஊழலை பற்றி பிரதமர் மோடி பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுகவை அழிக்க வெளியில் இருந்து ஆட்கள் வரவேண்டிய தேவை இல்லை என்றும் அதிமுகவை அழிக்கும் வேலையை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமிதான் தற்போது விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டை வளர்க்க போகிறேன் என்று இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் என்றும் வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல், இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.