கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி இரவு பகலாக மே 30 முதல் ஜூன் 1 வரை தியானத்தில் ஈடுபட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி கன்னியாகுமரி வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்திட்டத்தின்படி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் 30 ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கன்னியாகுமரி வருகை புரிகிறார். அதன்பின்னர்
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ஆம் தேதி தியானம் செய்கிறார். ஜுன் 1 ஆம் தேதி தியானம் முடிந்து அன்று மாலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரவு பகலாக மே 30 முதல் ஜூன் 1 வரை தியானத்தில் ஈடுபட உள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி வருகைக்காக கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவின்போது கேதர்நாத் குகையில் சுமார் 17 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது