உலகின் 8-வது அதிசயம் என்று பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டும் போஸ்டர்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன், திருநெல்வேலி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், "உலகின் 8வது அதிசயம்" என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டி, மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த போஸ்டரில் நரேந்திர மோடியும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் பூங்கொத்து பரிமாறிக் கொள்வது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் படமும் அந்த பேனரில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக-அதிமுக இடையே பனிப்போர் நிலவி வரும் இந்த சூழலில், மோடியின் பிறந்தநாளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்த படத்தை போஸ்டராக ஒட்டியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகுமா என்ற விவாதம் பரவலாக எழுந்துள்ளது.