Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! - திருமாவளவன் எம்.பி.,

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! - திருமாவளவன் எம்.பி.,
, சனி, 20 மே 2023 (21:53 IST)
2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு என்பது மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் என்று   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதற்கு பல அரசியல்வாதிகள்  கருத்துக்கள்  கூறி வருகின்றனர்.  இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக் கொடுத்துப் பொருட்களை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டமாகும்.

 2016 இல் பண மதிப்பு இழப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. தங்களிடமிருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. அப்படி மாற்றுவதற்காக வங்கிகளின் முன்னால் கோடிக் கணக்கான மக்கள் கால் கடுக்க நின்றனர். வரிசையில் நிற்கும்போதே பலர் உயிரிழந்தனர்.  2016 திசம்பரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி திரு. டெரக் ஓப்ரியன் வெளியிட்ட புள்ளிவிவரம் 105 பேர் அப்படி வங்கிகளின் முன்னால் வரிசையில் காத்திருக்கும்போதும், அதிர்ச்சியிலும் இறந்தனர் எனக் கூறியது. இப்போதும் அதே போன்று உயிர்களைக் காவு வாங்குவதற்காகத்தான்  இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தற்போது 3.62 லட்சம் கோடி மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. ஒருவர் ஒரு நேரத்தில் பத்து நோட்டுகளை மட்டுமே வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என அரசு அறிவித்திருப்பதால் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால்கூட 5 முறை அவர் வங்கிக்குச் சென்று மாற்றவேண்டும். இப்போதும்கூட பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலேயே வணிகம் செய்யும் சிறு வணிகர்களை இது மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் நோட்டுக்கென செய்யப்பட்ட மாற்றங்கள் இப்போது வீணாகியுள்ளன. இதனால் பல நூறு கோடி ரூபாய் விரயமாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னால் பொருளாதார நோக்கத்தைவிட அரசியல் நோக்கமே அதிகம் உள்ளதெனத் தெரிகிறது. 2016 இல் உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு முன்பு 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டன. இப்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பண மதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஐந்தே நாட்களில் குஜராத் மாநிலத்தில் பாஜகவுடன் தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் 3118 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதை அப்போதே காங்கிரஸ் கட்சி ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியது. முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள், அதனால் இதை

‘சட்டபூர்வமான கொள்ளை’ என விமர்சித்தார். இப்போதும் அப்படித்தான் நடக்கப்போகிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பாதிப்பை இந்த அறிவிப்பு அதிகப்படுத்தவே செய்யும்.

இந்த முன்யோசனையற்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்பு