நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் அளிப்பதற்காக வசதி படைத்த பெற்ரோர்களிடம் இருந்து தனியார் பள்ளிகள் கட்டுக்கட்டாக பணம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் பெற்றோர்களிடம் லட்ச கணக்கில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து பள்ளிகளில் ரெய்டு நடத்திய வருமானவரித் துறையினர் பல பள்ளிகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். ஒரு பள்ளியில் ஆடிட்டோரியத்தில் பணத்தை ரகசியமாக ஒளித்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதே போல கர்நாடகாவிலும் சமீபத்தில் நடந்த ரெய்டில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்காக மொத்தமாக மாணவர்களிடம் 100 கோடி ரூபாய் பெறப்பட்டது தெரிந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “வரி ஏய்ப்பு செய்யும் கல்வி நிறுவனங்கள் இந்த நீட் தேர்வை கொண்டு கணிசமாக சம்பாதித்துள்ளன. இந்த ஐடி ரெய்டின் மூலமாகவே தெரிகிறது பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வளவு செலவு செய்தும் நீட் படிக்க வைக்க தயாராய் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு நீட் எட்டாக்கனியாக இருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் பயிற்சிக்காக பல கோடி ரூபாய் பெற்றது, நீட் தேர்வில் முறைகேடுகள் என ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.