உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி அமைச்சர் வேலுமணி பல கோடி ஆதாயம் பெற்றுள்ளார் என டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல கோடி ஊழல்களும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளது முதல்வர் தரப்புக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஒப்பந்த ஊழலில் அமைச்சர் வேலுமணி சிக்கியுள்ளார்.
முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்களில் வேலுமணியும் ஒருவர். இவர் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உள்ளாட்சி துறை தொடர்பான ஒப்பந்தங்களை வழங்கியதாக டைம்ஸ் நவ் ஊடகம் நேற்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. 150 நாட்கள் நடத்திய புலனாய்வு விசாரனையில் இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளரும், கோவை இளைஞர் அணி செயலாளருமான ராஜன் சந்திரசேகர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு அமைச்சர் வேலுமணி கோவை மாநகராட்சியின் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.100 கோடியாக இருந்த அந்நிறுவனத்தின் வருவாய் 2016-17ம் ஆண்டில் ரூ.142 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், வரதன் இன்ஃப்ராஸ்டரக்சர் நிறுவனம், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமான பி.செந்தில் அண்ட் கோ நிறுவனம் என மொத்தம் 4 நிறுவனங்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்கிய ஒப்பந்தங்களினால் அந்த நிறுவனங்களின் வருவாய் சென்ற வருடத்தை விட பல கோடிகள் அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் மூலம் அமைச்சர் வேலுமணி ரூ.125 கோடி வரை ஆதாயம் அடைந்திருப்பதாகவும் டைம்ஸ் நவ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது.
இதுபற்றி அமைச்சர் வேலுமணியிடம் விளக்கமும் கேட்கப்பட்டது. ஆனால், இது சுத்த பொய். நான் விரும்பினால் மட்டுமே என்னிடம் நீங்கள் கேள்வி எழுப்ப முடியும். நீங்கள் மு.க.ஸ்டாலினின் பினாமியாக இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என நான் குற்றம் சாட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என அவர் பதிலளித்துள்ளார்.