பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இது திமுக ஆட்சியின் உளவுத்துறையின் படு தோல்வி என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த படுகொலை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் - வேதனையும் அடைந்தேன்.
அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும்.
இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.