சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது என்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்