தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் கங்கா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நான்கு விமானங்கள் மூலமாக பலர் மீட்கப்பட்டனர்.
இதுவரை உக்ரைனில் இருந்து 1,156 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ருமேனியா எல்லைக்கு வந்த தமிழக மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர். குறைந்த கட்டணம் வசூலிக்கக்கூடிய நாடுகளில் கல்வி பயில செல்வது வழக்கமானது தான். அப்படி தான் தற்போது உக்ரைனுக்கும் தமிழக மாணவர்கள் சென்றிருக்கலாம். உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்காக செலவை அரசே ஏற்கிறது என பேட்டியளித்துள்ளார்.