தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் 3 வேளையும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கவும் மதியம் 12 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 3 வேளை இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.