தனது சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவை படம் பிடிக்க செய்தியாளர்கள் வராததால் ஆளுங்கட்சி சேனலின் கேமராவை அமைச்சர் போட்டு உடைத்ததாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுங்கட்சி அமைச்சர்களில் அடிக்கடி சர்ச்சைக்குள்ளான வகையில் பேசி வைரலாக வலம் வருபவர் பால்வளத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இவரது சொந்த ஊரான திருத்தங்களில் உள்ள பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. சுற்றியுள்ள பல ஊர் மக்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு தேரை வலம்பிடித்து இழுத்தார்.
அந்த திருவிழாவை படம் பிடிக்க ஆளும் கட்சி செய்தி சேனலான நியூஸ்.ஜெ-வை தவிர வேறு எந்த செய்தி சேனலும் செல்லவில்லையாம். தன் சொந்த ஊரில் தான் கலந்து கொள்ளும் விழாவை படம் பிடிக்க மற்ற மீடியாக்கள் வரவில்லையே என்று அப்செட் ஆன ராஜேந்திர பாலாஜி நியூஸ்-ஜெ சேனலின் கேமராவை பிடுங்கி கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜேந்திரபாலாஜியின் தரப்பில் “அமைச்சர் தேரை வலம்பிடித்து எடுப்பதை நிருபர் படம்பிடித்து கொண்டிருந்த போது அமைச்சர் கை தெரியாமல் கேமரா மீது மோதியதால் அது கீழே விழுந்து உடைந்தது. இது தற்செயல் சம்பவம்தான்” என கூறப்பட்டுள்ளது.