தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் அனைத்து பல்கலைகழக தேர்வுகளும் ஒத்திவைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒமிக்ரான் மற்றும் டெல்டா இரு வகை வைரஸுகளுமே வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக அனைத்து பல்கலைகழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகே செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் எழுத்து தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும், கல்லூரிகள் திறக்கும் தேதி திறப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.