சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சென்னைக்கு வருகை தந்த போது திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும், ஊழல் அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
வாரிசு அரசியல் என்பது அதிமுக, பாஜக உள்பட அனைத்து கட்சிகளிலும் இருப்பதாகவும் ஆனால் திமுகவை மட்டுமே சுட்டிக் காட்டுவதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை என்றும் ஜெயலலிதா கொண்டு வந்தார் என்றும் கூறினார்
மேலும் திமுகவில் வழிவழியாக வாரிசு அரசியல் செய்து வருகின்றனர் என்றும் அதிமுகவில் அவ்வாறு இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவில் அடிமட்ட தொண்டர் கூட முதல்வராக முடியும் என்றும் திமுகவில் அவ்வாறு நடக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முக ஸ்டாலின் தயாரா என சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்க மாட்டார் என்றும் கூறினார். அமைச்சரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது