தலைமைச் செயலாளரை கடிந்துக்கொண்டதற்கு திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.
சமீபத்தில் தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் டிஆர் பாலு மற்றும் தயாநிதி உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் சந்தித்தபோது தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்ததாகவும், தாழ்த்தப்பட்டோர் போல் தங்களை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முரசொலியில் தலைமைச் செயலாளர் குறித்து காரசாரமான தலையங்கம் ஒன்று பதிவாகியுள்ளது. அதில் எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து, கொழுப்பு கூடிவிட்டது தமிழ்நாட்டின் தலைகனச் செயலர் சண்முகத்திற்கு.
ஜூலையோடு பதவி முடியவுள்ள நிலையில், பதவி நீட்டிப்பு ஆசையில் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் வாலாட்டிக் கொண்டிருக்கும் இன்னும் பல “சண்முகங்களின்” கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். கொரோனா வந்ததில் இருந்து செய்தியாளர்களை முன்பை போல் அடிக்கடி சந்திக்காமல் இருந்த அவர் மீண்டும் மீடியா முன்பு தோன்ற துவங்கியுள்ளார். அவர் கூறியதாவது,
விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக செயல்படும் ஜெண்டில் மேன் தலைமைச் செயலாளர் சண்முகம் மனதை திமுக கஷ்டப்படுத்தி உள்ளது. மோதுவதாக இருந்தால் தமிழக அரசுடன் மட்டுமே மோத வேண்டும் அதிகாரிகளை மிரட்டும் செயலில் திமுக ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திமுக திட்டமிட்டு சதி செய்கிறது என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.