தனியார் பால் நிறுவனங்களில் ரசாயண கலப்படம் செய்யப்படுகின்றன என புகார் தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் நலனை பேணிக் காப்பதற்காக பொன்னுசாமி, சுமார் 9ஆண்டுகளுக்கு முன் 2008ல் பால் முகவர்கள் சங்கத்தினை நிறுவி தொடர்ந்து பால் முகவர்களுக்காகவும், பொதுமக்கள் நலன் சார்ந்தும் செயல்பட்டு வந்தார். பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு 2015-ம் ஆண்டு முதல் "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" எனும் பெயரில் "இந்திய தொழிற்சங்க சட்டம் 1926"ன் கீழ் சங்கத்தினை முறையாக பதிவு செய்து பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன, தனியார் பால் நிறுவனங்களின் பாலினை குடிப்பதால் புற்றுநோய் வருகிறது" என பொத்தாம் பொதுவாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தினார்.
இதனால் பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் பால் முகவர்களின் பிரதிநிதியாக விளங்கி வரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் என்கிற முறையில் கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் எனும் பெயரில் ஆதாரமற்ற வகையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சரின் பேச்சிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதனை பொறுக்க முடியாத தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ன் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினை "டூப்ளிகேட் சங்கம்" என விமர்சித்தார். அதன் தலைவர் பொன்னுசாமி பால் முகவரே அல்ல, அவர் ஒரு டுபாக்கூர், தனியார் பால் நிறுவனங்களுக்கும், கலப்பட பால் நிறுவனங்களுக்கும் புரோக்கராக, இடைத்தரகராக இருப்பவர் எனவும், தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் அடுக்கடுக்காக ஆதாரமற்ற, விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி ஊடகங்களில் பேசியிருக்கிறார்.
இதன் காரணமாக அச்சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான பொன்னுசாமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மாநில பொதுச்செயலாளர் கே.எம்.கமாலுதீன், மாநில பொருளாளர் எஸ்.பொன்மாரியப்பன் ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள், பால் முகவர்கள் என அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினைப் பற்றியும், மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குறித்தும் மிகவும் அவதூறாகவும், விஷமத்தனமாகவும் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஒரு வார காலத்திற்குள் அவர் பேசிய பேச்சுக்களை திரும்ப பெற வேண்டும் என நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அவ்வாறு பேசியமைக்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சங்கத்திற்கும், தலைவருக்கும் உள்ள நற்பெயருக்கு களங்கமிழைக்க முனைந்தமைக்காகவும் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கினை தாக்கல் செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.